சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கனா’: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்
சிவகார்த்திகேயன் தயாரித்துவரும் படத்துக்கு ‘கனா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் சிவகார்த்திகேயன். இன்றைக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னனாக இருக்கும் சிவகார்த்திகேயன், நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து கொண்டே வருகிறார்.
‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள முதல் படத்துக்கு ‘கனா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பலமுகங்கள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இவர், சிவகார்த்திகேயனின் கல்லூரித் தோழர்.
கிரிக்கெட் வீரராக ஆசைப்படும் மகள் - அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் அப்பா. இதுதான் இந்தப் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர். இதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று (மே 15) வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ஆதி, நிக்கி கல்ரானி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். மோகன் ராஜன், ஜிகேபி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக லால்குடி என்.இளையராஜா பணியாற்றுகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் படத்தைத் தயாரித்து வருகிறார். திருச்சி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

Comments
Post a Comment